வியாழன், 16 மே, 2013

அடிஉயிர்




வசந்த காலத்தின் வார்த்தையில்லா அற்புதங்கள்!
பட்டுவிட்டதோ என்றுபட்ட மொட்டை மரக்காடுகள் ஒரே இரவில் கோடானுகோடி மொட்டுகள் அரும்ப கண்ணெதிரில் ஒளிந்திருந்ததோ உயிர்சக்தி?

எதிர் பக்கத்துக்கு மரக்கூட்டமே  நேற்று நான் வெளியிட்ட கரியமில வாயுவின் ஓர் சிறுதுளியையாவது நீ சுவாசித்தாயா? உனது பல்லாயிரம் பூக்களில் ஒரு மொட்டின் சிறு மடல் விரிய நானும் ஓர் மெல்லிய காரணமோ?

பரஸ்பர சுவாசத்தினால் நாம் உறவு கொண்டு உன்னில் நானுமாய் என்னில் நீயுமாய் வாழ்ந்து களிப்போம்.

உலகஜீவிகளின் உணவாய் இயற்கையை காய்க்கும் பிரபஞ்சத்துளியே! கடவுள் எனும் கருத்தின், நிலையின் ஸ்தூல வடிவமே! உயிர் பிச்சை போடும் பேரன்பு வெளியே! பச்சை தெய்வமே! பஞ்ச பூதங்கள் என் காதில் சொல்லின, இவள் எண்களின் உயிர்முடிச்சு என்று!

பல்லாயிரம் மலர்களுடன் நீ ஆர்பரித்து நிற்கையில் நானும் மலர்ந்தேன் - கிளையில்லா பூவானேன். கண்ணால் ஆனந்த தேன் உண்டேன்!

சில நாட்பொழுதில் திரும்பிப்பார்பதற்குள் பச்சைத்துகள் போர்த்தி நின்று மாயம் செய்தாய். நீ பூக்களின் இலைகளின் வண்ணங்களின் கடல். உனது துளிக்காட்சி போதும், என் மனம் எனும் கோப்பை நிரம்பி வழிய!

நுண்ணுயிராய் புல்லாய், படரும் கொடியாய் வளரும் செடியாய், சிறு புதராய் கிளை பரப்பும் மரமாய், மண்ணிலுமாய் நீரிலுமாய் நீக்கமற நிறைந்திருந்து, உருவங்கள் பல எடுப்பினும், நிறங்கள் பல உடுத்திலும் உயிரான நீ ஒன்றுதானோ?


சனி, 14 ஜனவரி, 2012

பார்வை

ஆனந்தமே அடித்தளம்!
ஆனந்தமே விதை!
ஆனந்தமே மரம்!
பேரின்பமே உந்து சக்தி!
வாழ்க்கையே பேரின்பத்தின்
புதையல் வேட்டை!

சுருதிகளை மீறிய
அனுபவம் வாய்க்கட்டும்!
அதற்கு ஞானத்தின்
ஆதிவிதையான தேடல் முளைக்கட்டும்!

சோம்பல் எருமையில்
என் பயணம் வேண்டாம்...
தாமதக்குட்டையில் புரண்டு
என்னை மூழ்கடித்து விடும்!

அளவுகோல் இல்லை!
ஒப்பீடும் இல்லை!
எழுதி வைத்துச் சொல்லக்கேட்ட
விதிகளும் இல்லை!


பலகோடி தரிசனங்கள் இருப்பினும்
நான் மட்டுமே
அவிழ்க்க கூடிய வாழ்க்கை
முடிச்சு இது!

கேள்வியோடு பதிலும்
சேர்ந்தே எப்பவும் உண்டு!
ஆதலால் கேள்வியை
கண்டு பிடி...பிறகு
பதில் தன்னால்
முகம் காட்டும்!

இருப்பது ஒன்றே!
இருப்பது எல்லாம் சுகமே!
இருப்பதை உணர்வது
பெரும் சுவையே!

இருப்பதை உணராததால்
ஆழ் உறக்கமும் மரணமும் ஒன்றா?
ஆழுறக்கதில் இருப்பதை உணர்ந்தால்
மரணத்திலும் இருப்பதை உணர்வேனோ?
ஆம், இருப்பதை
உணர்வது பெரும் சுவையே!

மனச்சட்டியில்
ஆழ்மனப் படிமக்குழம்பில்
சிந்தனை கொப்பளங்கள்!
பல செக்குமாட்டெண்ணங்கள்!
சுற்றுவதை நிறுத்த
சொன்னாலும் கேட்பதில்லை!
ஒரே வழியாக தோன்றுவது
அச்சாணியை பிடுங்கி வீசுவதே!


வெள்ளி, 11 நவம்பர், 2011

Subjective Reality

All one needs is straight forwardness to accept the Truth. One can close their eyes, and witness the process within oneself. 

Is your Habitual Thought Patterns tilted towards -ve or +ve?.

செவ்வாய், 21 ஜூன், 2011

ஓட்டம்

திருப்தி எனும் புதையல் தேடி
நெடுக நடக்கும்
வழிபோக்கன் நான்!

ஓடுகிறேன் விழிக்கிறேன்

தேடுகிறேன் முழிக்கிறேன்!
ஆஹா! அதுவே தான் என்று
கூத்தாடுகிறேன்!
அடி இல்லா பாத்திரம் போல் எதை போட்டாலும்
அடுத்து என்ன என்று அலைகிறேன்!
திரும்பவும்
ஆஹா! அதுவே தான் என்று
கூத்தாடுகிறேன்!


முதுகில் சுமந்து கொண்டே

பலச்சமயம் கீழே தேடுவதுண்டு!
இதுவும் அது போல் ஒன்றோ?

நடந்தவற்றை அசை போடும்
கால்நடை நான்! ஆனால்
பல சமயம் வெறும் வாயை மென்றே
தொண்டை அடைக்கும் நினைப்பும் உண்டு
வெறும் வாயில் தொண்டை அடைத்தால்
எதை விழுங்குவது இல்லை
எதை கக்குவது?

சனி, 18 ஜூன், 2011

நீர்த்துளி

(இது ஒரு கற்பனை மட்டுமே)

அமெரிக்காவின் கொலம்பஸ் நகரம். அதில் வற்றாத ஜீவநதி ஒலன்டேன்ஜி. மழைத்துளிகள் சேர்ந்து கை கோர்த்து, கூடி மகிழ்ந்து ஏதோ ஒரு பெயர் தெரியாத ஓடையில் விழுந்து எழுந்து நடனமாடி, இதோ இப்போது ஒலன்டேன்ஜி என்று பெயர் பெற்றிருக்கிறது.

இந்த துளிகளின் மூலம் என்னவோ? என்று முதன்முதலில் உருவானதோ? ஆவியாகவும் நீராகவும் பனிக்கட்டியாகவும் எங்கெல்லாம் இருந்ததோ? எவ்வளவு தூரம் பயணம் செய்ததோ? எவர் அறிவார்?

இன்று பசும் குளிர்ச்சிப்புல் போர்த்திய ஒலன்டேன்ஜி நதிக்கரையில் நிற்கிறேன். சற்று தொலைவில் இருந்து பார்த்தால், நதி அப்படியே இருப்பது போல் தோன்றுகிறது. சிறு சிறு அலைகள் அப்படியே செதுக்கியது போல் தான் தோன்றுகிறன. மிக அருகில் சென்று பார்த்தேன்.

என்ன அதிசயம்! இதோ இப்போது பார்த்த நீர்த்துளி அடுத்த நொடி அதே இடத்தில் இல்லை. எதை வைத்து நதி இங்கே இருக்கிறது என்று நான் சொல்வது? நான் பார்த்து என்னை கடந்து போன நீர்த்துளிகளா? பார்க்க போகும் நீர்த்துளிகளா? புரிகிறது, பார்த்து கொண்டே இருக்கையில் ஓடிக்கொண்டே இருக்கும் நீர்த்துளிகள் மட்டும் தான் நதி என்று.

காலணியை விட்டுவிட்டு கொஞ்சம் நீரில் கால் நனைக்க முடிவெடுத்தேன். ஓர் அழகிய அலை அதன் போக்கில் தன்மையாக மெதுவாக வந்து கொண்டு இருந்தது. கால் வைக்கும் நேரத்தில் அதே அலை என் மேல் பட்டு கடந்து சென்றது. ஓர் க்ஷணம் அன்யோன்ய உணர்வு பெற்றேன். ஓர் உறவு நிறைந்தேன். பிரியா விடை கொடுத்தது போல் உணர்ந்தேன். மன அலையும் நீர் அலையும் அந்த ஓர் க்ஷணம் சேர்ந்து பிரிந்தது.

அது அதன் வாழ்வு வழி போவதை பார்த்து கொண்டு நின்றேன். மன நிறைவடைந்தேன், அதற்கு நன்றி சொன்னேன். மறுபடி சந்திப்போமென்றேன். ஆனால் எப்படி என்று எனக்கு நிச்சயம் தெரியாது. நதி வழியே அது. விதி வழியே நான்.


வெள்ளி, 17 ஜூன், 2011

எனக்கு சிறந்த நண்பன் நானே, கடுமையான எதிரியும் நானே

இக்கட்டுரை எனது தனிப்பட்ட பரிசோதனை மற்றும் புரிதல் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஹிந்து சமயம் என்று பரவலாக அறியப்படும் சனாதன தர்மம் என்னும் இந்திய ஞான வாழ்வியல் முறையை, இன்று உலகில் வாழும் பெரும்பாலான மக்கள் மறுகண்டுபிடிப்பு செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளார்கள். இந்த மறுகண்டுபிடிப்பு செய்து அதை வாழ்வியல் ஆக்க முற்படும் பலரில் நானும் ஒருவன்.

சுற்றத்தார்கள் கோவில்களுக்கு படை எடுத்து எல்லா பிராத்தனைகளும் பிராயச்சித்தங்களும் செய்வதை பார்க்கிறோம். கோவில்களின் தேவை மக்களுக்கு பெரும்பாலும் அவர்களின் எதிர்பார்ப்பை, ஆசைகளின் எதிர்கால பிம்பத்தை எப்படியாவது அவர்தம் இஷ்டக்கடவுள் முன் போட்டு அவரின் சிபாரிசு பிடிக்கும் பெருமுயற்சியாக சுருங்கி இருக்கின்றது. இதில் தவறு கண்டு பிடிப்பது என் நோக்கமல்ல. ஆனால் உண்மையாயிருப்பது இவர்களில் பெரும்பாலானவர்கள் (நாம் உட்பட) பயம், கவலை, உறவு சிக்கல்கள், அஹங்காரம், பொய்-மானம், திருப்தியின்மை ஆகியவற்றை விட்டொழிக்க முடியாமல் வருந்துவதை, தான் மட்டும் அல்லல் படுவதல்லாமல் இவர்களின் இந்த பலவீனத்தால் மற்றவர்க்கும் கெடுதல் நேர்வதை கண் கூடாக காண்கிறோம். பல பேர் தனது அஹங்காரத்தையே தன் உரிமை என்று நம்பி வாழ்வதை, மற்றவர்களை மட்டம் தட்டுவதை பார்க்கிறோம். நிலை கெட்ட மனம் மட்டும் தான் இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒரே தீய சக்தி.

போய்சேர வேண்டிய இடத்தை விட்டுவிட்டு ஒரு ஏணியை பிடித்துக்கொண்டு தொங்குகிறவனின் நிலை இது. எல்லா மதத்தினர்க்கும் இது பொருந்தும் ஒன்றாக இருக்கிறது. ஏன் இந்த அவல நிலை? இவை எல்லாம் சேர்த்து எனக்கு குழப்பமே ஆரம்ப கட்டமானது.

இவர்களின் இந்த நிலையை பார்த்து, ஆன்மீகத்தால் எந்த பயனும் இல்லை, இதற்கு ஒரே மாற்று நவீன அறிவியலே என்ற பொது எண்ணம் பரவி இருக்கிறது. எனக்கும் இருந்தது. ஆனால், நவீன அறிவியல் உறவை வளர்த்ததாக, கருணையை அறிமுகம் செய்ததாக, நிம்மதி நிறைந்த வாழ்க்கை அமைத்ததாக சரித்திரம் இல்லை. நவீன அறிவியல் படிப்பும், அதன் சாதனங்களும் தான் மனித குல மேம்பாட்டின் எதிர்காலம் என்று கூவுகிறவர்கள் கொஞ்சம் கவனியுங்கள். இது ஒரு கூர்மையான கத்தி மட்டுமே. இதன் உபயோகம் இதை கையில் வைத்து இருப்பவனின் மனோநிலையை பொறுத்தே இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்து உயிர் காக்கலாம், இல்லை கழுத்தறுத்து உயிரையும் எடுக்கலாம். வெறும் கையால் சண்டை போட்டவன், இப்பொழுது நவீன கருவிகளால் அதே சண்டையைத்தான் தொடர்கிறான்.

ஆதாலால், ஒவ்வொரு நபரிடமும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது - முதலில் தன் வாழ்க்கையை அமைதியுடன் திருப்தியுடன் வாழ்வது - குடும்பமாக சேர்ந்து இதை அடைவது. அதற்கு சனாதன தர்ம வாழ்வியல் முறை மிகச்சிறந்த வழி காட்டுகிறது.

தன்னையறிதல் போன்ற மேல்நிலைகள் வாழ்க்கையின் உன்னத நோக்கமாக சொல்லப்பட்டு இருக்கின்றன. இதை அடைந்து வாழ்ந்த, வாழும் ஞானிகள் எப்பவும் உண்டு. இருந்தாலும், என்னை போன்ற பெரும்பாலோர் உணர்வது அனுபவிப்பது சாமான்ய தினசரி வாழ்க்கை மட்டுமே. இந்த உலகம் எனக்கு அனுபவரீதியாக மெய். இந்திய ஞான வாழ்வியல் முறையின் அடிப்படை குறிக்கோள்களில் முக்கியமானது நான் எப்படி தினசரி என் வாழ்க்கையை, அதனின் பொறுப்புகளை பூரணமாக ஏற்று செய்கிறேன், அனுபவங்களை திருப்தியாக கடக்கிறேன் என்பதே. இது யாரோ வெளியே அளந்து வைத்து இருக்கும் அளவு கோள் அல்ல. எனது உள்ளுணர்வு சொல்லும் உற்சாக அமைதி நிலையே என்பதை உணர்கிறேன்.

நமது வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும் அடிப்படை வாழ்வியல் காரணிகள் கீழிருப்பன. இது எவர்க்கும் எந்த கால தேச இடை வெளிகளுக்கும் பொருந்தும் என்று நம்புகிறேன்.

  1. பல தள பொறுப்புகளை சோர்வின்றி சிறப்பாக செயல் படுத்துவது. தொழில் நுட்ப ஆற்றல், படைப்பாற்றல், உடல் நலம், கனிந்த உறவுகள், சமூக மற்றும் பொருளாதார தேவைகளும் இதில் அடக்கம்.

  2. கூடவே ஒரு சேர கொப்பளிக்கும் மன உற்சாகம் மற்றும் திருப்தி (அதாவது, கடந்த காலத்தை பற்றிய குறைகளும், எதிர் காலத்தை பற்றிய கவலைகளும் இல்லாமல் இருப்பது)

மேற்கூறிய வாழ்வியல் தரங்களை அடைய இந்திய ஞான வாழ்வியல் முறையில் எத்தனையோ வழிகள் கூறப்பட்டு இருக்கின்றன. அவற்றில், என்னுடைய இன்றைய வாழ்க்கை கட்டத்தில் , மிக சிறந்த பயனுள்ள அனுபவ உண்மை என்று நான் உணர்வது, கடைப்பிடிக்க முட்படுவது:

“உன் பொறுப்பை முழுமையாக ஏற்று செய். நடக்க போவதை பற்றி கவலை கொள்ளாதே - அதை இந்த பிரபஞ்சத்தின் பொறுப்பில் விட்டுவிடு” - பகவத் கீதை 2.47

“உனக்கு சிறந்த நண்பன் நீயே, அதே சமயம் உனக்கு கடுமையான எதிரியும் நீயே” - பகவத் கீதை 6.6

உலக வசதிகள் எல்லாவற்றையும் நீ கண்டிப்பாக அடைவாய் என்று இந்திய ஞான மார்க்கம் சத்தியம் செய்கிறதா? இல்லை. உன்னால் எதுவும் நடப்பதில்லை, எல்லாம் கடவுளின் அருள் - அதனால் அவரிடம் எல்லாம் ஒப்படைத்து எதுவும் செய்யாமல் சோம்பி இருக்க சொல்கிறதா? இல்லை.

திரும்பத்திரும்ப அழுத்திக்கூறுகிறது - உன் பொறுப்பை உணர்ந்து, அதை பூரணமாக முழு திருப்தியுடன் செய்து விடு. கடிவாளம் கட்டிய குதிரை போல் தான் எனது குறுகிய பார்வை மற்றும் அனுபவம். அதை வைத்து தான் என் ஆசைகளும் எதிர்ப்பார்ப்புகளும் உருப்பெற்று கிடக்கின்றன. இந்த கடிவாளப்பார்வையின் மூலம் வருங்கால வாழ்க்கையின் தூரத்தை ஆழத்தை அகலத்தை பார்க்க முடிவதில்லை. ஆகவே, என் கையில் இருக்கும் அவகாசத்தை, நான் எது பொறுப்பு என்று உணர்கிறேனோ அதை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பது மட்டுமே என் வரையறைக்குள் இருப்பது.

ஆனால் வரும் பலன் என் கையில் இல்லை. எதிர் காலம் எனக்கு தெரியாது, மாற்றவும் முடியாது. அது எனது எதிர்ப்பார்ப்பை ஒட்டி இருக்கலாம், இல்லை இல்லாமலும் போகலாம். ஒவ்வொருவர்க்கும் அவரவர் வாழ்க்கை மறுபடி மறுபடி கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கும் அருமை பாடம் இது. இதை உணர்ந்து, இந்த அகண்ட பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கை வைக்க முற்படுகிறேன் - இங்கு சொல்லப்படுவது "நான் நினைத்தது நடக்க வேண்டும்" என்ற நம்பிக்கை அல்ல. மாறாக, இப்பிரபஞ்சத்தின் ஆற்றல், அருள், அளவு, புத்தி இவையிலும், என்னை விட அதன் பார்வையின் விஸ்தாரணம் அதிகம், என் மனதை போன்று அது பாரபட்சம் பார்ப்பது இல்லை என்பதிலும் - பெரும் நம்பிக்கை. என் பொறுப்பை முழுமையாக செய்யும் திருப்தியுடன் இந்த பெரும் நம்பிக்கை சேரும் போது இது எதிர்கால பயத்தை மட்டும் போக்குவதில்லை, கூடவே கடந்த காலத்தை பற்றிய ஆறுதலும் சாந்தியும் அளிக்கிறது.

இதை நடை முறைப்படுத்தும் பொழுது, இன்னொரு அதிசயம் நடக்கிறது - என்னை ஆட்டி படைக்கும் அடிமை பழக்க வழக்கத்தின் பிடி தளருவதை உணர்கிறேன். ஒவ்வொருவர்க்குமுள்ள பயமும், எரிச்சலும், கோபமும், கவலையும், அஹங்காரமும், சோர்வும் பழக்க வழக்கங்களே. நாம் பேசும் பேச்சும், அனுகுமுறையும், சிந்திக்கும் வரிசையும் பல சமயங்களில் நமது கட்டுக்குள் இல்லாமல் செக்கு மாடு போல் சுற்றி சுற்றி வருவதும் பழக்க வழக்கமே. இவையே நமது உள்ளிருக்கும் முரட்டு சர்வாதிகாரி. இந்த சர்வாதிகாரியை கர்ம யோகம் கொண்டு விரட்டும் போது எனக்கு நானே நண்பன் ஆகிறேன். இந்த சர்வாதிகாரியின் அடிமையாக நான் ஆகும் போது எனக்கு நானே கடுமையான எதிரி ஆகிறேன்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

முதல் கருத்து - வாழு வாழவிடு

வாழு வாழவிடு. இது தான் எனது கோட்பாடு. "தான்" என்ற எண்ணத்தில் இருந்து தான் இவ்வுலகின் எல்லா பிரச்சினைகளும் முளைக்கின்றன என்பது எனது கருத்து.

இல்லத்திலிருந்து ஊர் வரை. அரசியலில் இருந்து மதம் வரை. உறவுகளிலிருந்து சமுதாயம் வரை. "தான்" விளையாடுகிறது; "தான்" மட்டும் தான் விளையாடுகிறது.

பொறுமை இன்மை, பொறாமை, கோபம், அடக்குமுறை, எரிச்சல்; இவை எல்லாமே, "தான்" னின் மறு வடிவங்கள் தான். வேறொன்றும் இலலை. இங்கிலிஷில் ஈகோ. சமஸ்க்ருதத்தில் அஹங்காரம். இது செயல் வடிவம் பெறும் பொழுது சகிக்க முடியாத தாக்கத்தை உண்டாக்குகிறது. இதை வெளிப்படையாக சொல்லவும் வேண்டுமா? வீட்டில் நடக்கும் வன்முறைகளான மட்டம் தட்டுதல், வேண்டும் என்றே செய்யப்படும் அவமானங்கள், புறம் பேசுதல்; சமுதாய கேடுகளான ஊழல், ஜாதி வேறுபாடுகள், மத கலவரங்கள்; பெண் மீது கொடுமைகள், சில சமயம் ஆண் மீது கொடுமைகள். மனித அடிமைத்தனம், திணிக்க பட்ட போர். இது மட்டும் அல்லாமல், மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் படும் அவஸ்தை - உணவுக்காக மற்றும் பொழுது போக்குக்காக.

ஓகே.
இது - அதாவது ஈகோ - கொடுமை குணம் நிறைந்தவர்களுக்கு மட்டும் இருக்கும் ஒன்றா? இதை பற்றிய நமது பொதுவான எண்ணம் முறையான புரிதலில் உள்ளதா என்று பார்ப்போம். ஒரு சிறிய நிகழ்வை எடுத்து கொள்வோம்.

நான் ஒரு பொது நிகழ்ச்சிக்கு செல்கிறேன். உள்ளே அரங்கத்தில் நுழையும் போதோ அல்லது சபைக்கு செல்லும்போதோ மற்றவர்கள் நம்மை கவனிக்கிறார்களா, பார்க்கிறார்களா என்ற எண்ணம் எனது மனதில் எழுந்தால், எனது "தான்" அங்கே எழுகிறது என்று பொருள். இதே எண்ணம் தான் மேற்கூறிய நெகடிவ் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் அடிப்படை.

இவ்வுலகின் எல்லா மதங்களும், வழி பாட்டு முறைகளும் முதலில் நிருவிக்கபட்டது இந்த
அஹங்காரத்தை கட்டுப்படுத்த மட்டுமே. இறைவன் அருள் உண்டோ இல்லையோ, பிரார்த்தனை பலிக்குமோ இல்லையோ, படையல் வைக்க வேண்டுமோ இல்லையோ, ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம். அது அஹங்காரத்தை கட்டுக்குள் வைத்து இருப்பதே.

பிறகு மதத்திற்கே மதம் பிடித்தது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பாவம் மதம். நமது "தானில்" மாட்டி கொண்டு முழிக்கிறது. எதை கட்டுக்குள் வைக்க நிறுவப்பட்டதோ அதுவே தற்போது மேல் எழும்பி நிற்கிறது, தனது மிகப்பெரிய கரங்களை விரித்து ஆரத்தழுவ.