வாழு வாழவிடு. இது தான் எனது கோட்பாடு. "தான்" என்ற எண்ணத்தில் இருந்து தான் இவ்வுலகின் எல்லா பிரச்சினைகளும் முளைக்கின்றன என்பது எனது கருத்து.
இல்லத்திலிருந்து ஊர் வரை. அரசியலில் இருந்து மதம் வரை. உறவுகளிலிருந்து சமுதாயம் வரை. "தான்" விளையாடுகிறது; "தான்" மட்டும் தான் விளையாடுகிறது.
பொறுமை இன்மை, பொறாமை, கோபம், அடக்குமுறை, எரிச்சல்; இவை எல்லாமே, "தான்" னின் மறு வடிவங்கள் தான். வேறொன்றும் இலலை. இங்கிலிஷில் ஈகோ. சமஸ்க்ருதத்தில் அஹங்காரம். இது செயல் வடிவம் பெறும் பொழுது சகிக்க முடியாத தாக்கத்தை உண்டாக்குகிறது. இதை வெளிப்படையாக சொல்லவும் வேண்டுமா? வீட்டில் நடக்கும் வன்முறைகளான மட்டம் தட்டுதல், வேண்டும் என்றே செய்யப்படும் அவமானங்கள், புறம் பேசுதல்; சமுதாய கேடுகளான ஊழல், ஜாதி வேறுபாடுகள், மத கலவரங்கள்; பெண் மீது கொடுமைகள், சில சமயம் ஆண் மீது கொடுமைகள். மனித அடிமைத்தனம், திணிக்க பட்ட போர். இது மட்டும் அல்லாமல், மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் படும் அவஸ்தை - உணவுக்காக மற்றும் பொழுது போக்குக்காக.
ஓகே. இது - அதாவது ஈகோ - கொடுமை குணம் நிறைந்தவர்களுக்கு மட்டும் இருக்கும் ஒன்றா? இதை பற்றிய நமது பொதுவான எண்ணம் முறையான புரிதலில் உள்ளதா என்று பார்ப்போம். ஒரு சிறிய நிகழ்வை எடுத்து கொள்வோம்.
நான் ஒரு பொது நிகழ்ச்சிக்கு செல்கிறேன். உள்ளே அரங்கத்தில் நுழையும் போதோ அல்லது சபைக்கு செல்லும்போதோ மற்றவர்கள் நம்மை கவனிக்கிறார்களா, பார்க்கிறார்களா என்ற எண்ணம் எனது மனதில் எழுந்தால், எனது "தான்" அங்கே எழுகிறது என்று பொருள். இதே எண்ணம் தான் மேற்கூறிய நெகடிவ் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் அடிப்படை.
இவ்வுலகின் எல்லா மதங்களும், வழி பாட்டு முறைகளும் முதலில் நிருவிக்கபட்டது இந்த அஹங்காரத்தை கட்டுப்படுத்த மட்டுமே. இறைவன் அருள் உண்டோ இல்லையோ, பிரார்த்தனை பலிக்குமோ இல்லையோ, படையல் வைக்க வேண்டுமோ இல்லையோ, ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம். அது அஹங்காரத்தை கட்டுக்குள் வைத்து இருப்பதே.
பிறகு மதத்திற்கே மதம் பிடித்தது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பாவம் மதம். நமது "தானில்" மாட்டி கொண்டு முழிக்கிறது. எதை கட்டுக்குள் வைக்க நிறுவப்பட்டதோ அதுவே தற்போது மேல் எழும்பி நிற்கிறது, தனது மிகப்பெரிய கரங்களை விரித்து ஆரத்தழுவ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக