இக்கட்டுரை எனது தனிப்பட்ட பரிசோதனை மற்றும் புரிதல் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஹிந்து சமயம் என்று பரவலாக அறியப்படும் சனாதன தர்மம் என்னும் இந்திய ஞான வாழ்வியல் முறையை, இன்று உலகில் வாழும் பெரும்பாலான மக்கள் மறுகண்டுபிடிப்பு செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளார்கள். இந்த மறுகண்டுபிடிப்பு செய்து அதை வாழ்வியல் ஆக்க முற்படும் பலரில் நானும் ஒருவன்.
சுற்றத்தார்கள் கோவில்களுக்கு படை எடுத்து எல்லா பிராத்தனைகளும் பிராயச்சித்தங்களும் செய்வதை பார்க்கிறோம். கோவில்களின் தேவை மக்களுக்கு பெரும்பாலும் அவர்களின் எதிர்பார்ப்பை, ஆசைகளின் எதிர்கால பிம்பத்தை எப்படியாவது அவர்தம் இஷ்டக்கடவுள் முன் போட்டு அவரின் சிபாரிசு பிடிக்கும் பெருமுயற்சியாக சுருங்கி இருக்கின்றது. இதில் தவறு கண்டு பிடிப்பது என் நோக்கமல்ல. ஆனால் உண்மையாயிருப்பது இவர்களில் பெரும்பாலானவர்கள் (நாம் உட்பட) பயம், கவலை, உறவு சிக்கல்கள், அஹங்காரம், பொய்-மானம், திருப்தியின்மை ஆகியவற்றை விட்டொழிக்க முடியாமல் வருந்துவதை, தான் மட்டும் அல்லல் படுவதல்லாமல் இவர்களின் இந்த பலவீனத்தால் மற்றவர்க்கும் கெடுதல் நேர்வதை கண் கூடாக காண்கிறோம். பல பேர் தனது அஹங்காரத்தையே தன் உரிமை என்று நம்பி வாழ்வதை, மற்றவர்களை மட்டம் தட்டுவதை பார்க்கிறோம். நிலை கெட்ட மனம் மட்டும் தான் இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒரே தீய சக்தி.
போய்சேர வேண்டிய இடத்தை விட்டுவிட்டு ஒரு ஏணியை பிடித்துக்கொண்டு தொங்குகிறவனின் நிலை இது. எல்லா மதத்தினர்க்கும் இது பொருந்தும் ஒன்றாக இருக்கிறது. ஏன் இந்த அவல நிலை? இவை எல்லாம் சேர்த்து எனக்கு குழப்பமே ஆரம்ப கட்டமானது.
இவர்களின் இந்த நிலையை பார்த்து, ஆன்மீகத்தால் எந்த பயனும் இல்லை, இதற்கு ஒரே மாற்று நவீன அறிவியலே என்ற பொது எண்ணம் பரவி இருக்கிறது. எனக்கும் இருந்தது. ஆனால், நவீன அறிவியல் உறவை வளர்த்ததாக, கருணையை அறிமுகம் செய்ததாக, நிம்மதி நிறைந்த வாழ்க்கை அமைத்ததாக சரித்திரம் இல்லை. நவீன அறிவியல் படிப்பும், அதன் சாதனங்களும் தான் மனித குல மேம்பாட்டின் எதிர்காலம் என்று கூவுகிறவர்கள் கொஞ்சம் கவனியுங்கள். இது ஒரு கூர்மையான கத்தி மட்டுமே. இதன் உபயோகம் இதை கையில் வைத்து இருப்பவனின் மனோநிலையை பொறுத்தே இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்து உயிர் காக்கலாம், இல்லை கழுத்தறுத்து உயிரையும் எடுக்கலாம். வெறும் கையால் சண்டை போட்டவன், இப்பொழுது நவீன கருவிகளால் அதே சண்டையைத்தான் தொடர்கிறான்.
ஆதாலால், ஒவ்வொரு நபரிடமும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது - முதலில் தன் வாழ்க்கையை அமைதியுடன் திருப்தியுடன் வாழ்வது - குடும்பமாக சேர்ந்து இதை அடைவது. அதற்கு சனாதன தர்ம வாழ்வியல் முறை மிகச்சிறந்த வழி காட்டுகிறது.
தன்னையறிதல் போன்ற மேல்நிலைகள் வாழ்க்கையின் உன்னத நோக்கமாக சொல்லப்பட்டு இருக்கின்றன. இதை அடைந்து வாழ்ந்த, வாழும் ஞானிகள் எப்பவும் உண்டு. இருந்தாலும், என்னை போன்ற பெரும்பாலோர் உணர்வது அனுபவிப்பது சாமான்ய தினசரி வாழ்க்கை மட்டுமே. இந்த உலகம் எனக்கு அனுபவரீதியாக மெய். இந்திய ஞான வாழ்வியல் முறையின் அடிப்படை குறிக்கோள்களில் முக்கியமானது நான் எப்படி தினசரி என் வாழ்க்கையை, அதனின் பொறுப்புகளை பூரணமாக ஏற்று செய்கிறேன், அனுபவங்களை திருப்தியாக கடக்கிறேன் என்பதே. இது யாரோ வெளியே அளந்து வைத்து இருக்கும் அளவு கோள் அல்ல. எனது உள்ளுணர்வு சொல்லும் உற்சாக அமைதி நிலையே என்பதை உணர்கிறேன்.
நமது வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும் அடிப்படை வாழ்வியல் காரணிகள் கீழிருப்பன. இது எவர்க்கும் எந்த கால தேச இடை வெளிகளுக்கும் பொருந்தும் என்று நம்புகிறேன்.
பல தள பொறுப்புகளை சோர்வின்றி சிறப்பாக செயல் படுத்துவது. தொழில் நுட்ப ஆற்றல், படைப்பாற்றல், உடல் நலம், கனிந்த உறவுகள், சமூக மற்றும் பொருளாதார தேவைகளும் இதில் அடக்கம்.
கூடவே ஒரு சேர கொப்பளிக்கும் மன உற்சாகம் மற்றும் திருப்தி (அதாவது, கடந்த காலத்தை பற்றிய குறைகளும், எதிர் காலத்தை பற்றிய கவலைகளும் இல்லாமல் இருப்பது)
மேற்கூறிய வாழ்வியல் தரங்களை அடைய இந்திய ஞான வாழ்வியல் முறையில் எத்தனையோ வழிகள் கூறப்பட்டு இருக்கின்றன. அவற்றில், என்னுடைய இன்றைய வாழ்க்கை கட்டத்தில் , மிக சிறந்த பயனுள்ள அனுபவ உண்மை என்று நான் உணர்வது, கடைப்பிடிக்க முட்படுவது:
“உன் பொறுப்பை முழுமையாக ஏற்று செய். நடக்க போவதை பற்றி கவலை கொள்ளாதே - அதை இந்த பிரபஞ்சத்தின் பொறுப்பில் விட்டுவிடு” - பகவத் கீதை 2.47
“உனக்கு சிறந்த நண்பன் நீயே, அதே சமயம் உனக்கு கடுமையான எதிரியும் நீயே” - பகவத் கீதை 6.6
உலக வசதிகள் எல்லாவற்றையும் நீ கண்டிப்பாக அடைவாய் என்று இந்திய ஞான மார்க்கம் சத்தியம் செய்கிறதா? இல்லை. உன்னால் எதுவும் நடப்பதில்லை, எல்லாம் கடவுளின் அருள் - அதனால் அவரிடம் எல்லாம் ஒப்படைத்து எதுவும் செய்யாமல் சோம்பி இருக்க சொல்கிறதா? இல்லை.
திரும்பத்திரும்ப அழுத்திக்கூறுகிறது - உன் பொறுப்பை உணர்ந்து, அதை பூரணமாக முழு திருப்தியுடன் செய்து விடு. கடிவாளம் கட்டிய குதிரை போல் தான் எனது குறுகிய பார்வை மற்றும் அனுபவம். அதை வைத்து தான் என் ஆசைகளும் எதிர்ப்பார்ப்புகளும் உருப்பெற்று கிடக்கின்றன. இந்த கடிவாளப்பார்வையின் மூலம் வருங்கால வாழ்க்கையின் தூரத்தை ஆழத்தை அகலத்தை பார்க்க முடிவதில்லை. ஆகவே, என் கையில் இருக்கும் அவகாசத்தை, நான் எது பொறுப்பு என்று உணர்கிறேனோ அதை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பது மட்டுமே என் வரையறைக்குள் இருப்பது.
ஆனால் வரும் பலன் என் கையில் இல்லை. எதிர் காலம் எனக்கு தெரியாது, மாற்றவும் முடியாது. அது எனது எதிர்ப்பார்ப்பை ஒட்டி இருக்கலாம், இல்லை இல்லாமலும் போகலாம். ஒவ்வொருவர்க்கும் அவரவர் வாழ்க்கை மறுபடி மறுபடி கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கும் அருமை பாடம் இது. இதை உணர்ந்து, இந்த அகண்ட பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கை வைக்க முற்படுகிறேன் - இங்கு சொல்லப்படுவது "நான் நினைத்தது நடக்க வேண்டும்" என்ற நம்பிக்கை அல்ல. மாறாக, இப்பிரபஞ்சத்தின் ஆற்றல், அருள், அளவு, புத்தி இவையிலும், என்னை விட அதன் பார்வையின் விஸ்தாரணம் அதிகம், என் மனதை போன்று அது பாரபட்சம் பார்ப்பது இல்லை என்பதிலும் - பெரும் நம்பிக்கை. என் பொறுப்பை முழுமையாக செய்யும் திருப்தியுடன் இந்த பெரும் நம்பிக்கை சேரும் போது இது எதிர்கால பயத்தை மட்டும் போக்குவதில்லை, கூடவே கடந்த காலத்தை பற்றிய ஆறுதலும் சாந்தியும் அளிக்கிறது.
இதை நடை முறைப்படுத்தும் பொழுது, இன்னொரு அதிசயம் நடக்கிறது - என்னை ஆட்டி படைக்கும் அடிமை பழக்க வழக்கத்தின் பிடி தளருவதை உணர்கிறேன். ஒவ்வொருவர்க்குமுள்ள பயமும், எரிச்சலும், கோபமும், கவலையும், அஹங்காரமும், சோர்வும் பழக்க வழக்கங்களே. நாம் பேசும் பேச்சும், அனுகுமுறையும், சிந்திக்கும் வரிசையும் பல சமயங்களில் நமது கட்டுக்குள் இல்லாமல் செக்கு மாடு போல் சுற்றி சுற்றி வருவதும் பழக்க வழக்கமே. இவையே நமது உள்ளிருக்கும் முரட்டு சர்வாதிகாரி. இந்த சர்வாதிகாரியை கர்ம யோகம் கொண்டு விரட்டும் போது எனக்கு நானே நண்பன் ஆகிறேன். இந்த சர்வாதிகாரியின் அடிமையாக நான் ஆகும் போது எனக்கு நானே கடுமையான எதிரி ஆகிறேன்.