ஆனந்தமே அடித்தளம்!
ஆனந்தமே விதை!
ஆனந்தமே மரம்!
பேரின்பமே உந்து சக்தி!
வாழ்க்கையே பேரின்பத்தின்
புதையல் வேட்டை!
சுருதிகளை மீறிய
அனுபவம் வாய்க்கட்டும்!
அதற்கு ஞானத்தின்
ஆதிவிதையான தேடல் முளைக்கட்டும்!
சோம்பல் எருமையில்
என் பயணம் வேண்டாம்...
தாமதக்குட்டையில் புரண்டு
என்னை மூழ்கடித்து விடும்!
அளவுகோல் இல்லை!
ஒப்பீடும் இல்லை!
எழுதி வைத்துச் சொல்லக்கேட்ட
விதிகளும் இல்லை!
பலகோடி தரிசனங்கள் இருப்பினும்
நான் மட்டுமே
அவிழ்க்க கூடிய வாழ்க்கை
முடிச்சு இது!
கேள்வியோடு பதிலும்
சேர்ந்தே எப்பவும் உண்டு!
ஆதலால் கேள்வியை
கண்டு பிடி...பிறகு
பதில் தன்னால்
முகம் காட்டும்!
இருப்பது ஒன்றே!
இருப்பது எல்லாம் சுகமே!
இருப்பதை உணர்வது
பெரும் சுவையே!
இருப்பதை உணராததால்
ஆழ் உறக்கமும் மரணமும் ஒன்றா?
ஆழுறக்கதில் இருப்பதை உணர்ந்தால்
மரணத்திலும் இருப்பதை உணர்வேனோ?
ஆம், இருப்பதை
உணர்வது பெரும் சுவையே!
மனச்சட்டியில்
ஆழ்மனப் படிமக்குழம்பில்
சிந்தனை கொப்பளங்கள்!
பல செக்குமாட்டெண்ணங்கள்!
சுற்றுவதை நிறுத்த
சொன்னாலும் கேட்பதில்லை!
ஒரே வழியாக தோன்றுவது
அச்சாணியை பிடுங்கி வீசுவதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக