சனி, 18 ஜூன், 2011

நீர்த்துளி

(இது ஒரு கற்பனை மட்டுமே)

அமெரிக்காவின் கொலம்பஸ் நகரம். அதில் வற்றாத ஜீவநதி ஒலன்டேன்ஜி. மழைத்துளிகள் சேர்ந்து கை கோர்த்து, கூடி மகிழ்ந்து ஏதோ ஒரு பெயர் தெரியாத ஓடையில் விழுந்து எழுந்து நடனமாடி, இதோ இப்போது ஒலன்டேன்ஜி என்று பெயர் பெற்றிருக்கிறது.

இந்த துளிகளின் மூலம் என்னவோ? என்று முதன்முதலில் உருவானதோ? ஆவியாகவும் நீராகவும் பனிக்கட்டியாகவும் எங்கெல்லாம் இருந்ததோ? எவ்வளவு தூரம் பயணம் செய்ததோ? எவர் அறிவார்?

இன்று பசும் குளிர்ச்சிப்புல் போர்த்திய ஒலன்டேன்ஜி நதிக்கரையில் நிற்கிறேன். சற்று தொலைவில் இருந்து பார்த்தால், நதி அப்படியே இருப்பது போல் தோன்றுகிறது. சிறு சிறு அலைகள் அப்படியே செதுக்கியது போல் தான் தோன்றுகிறன. மிக அருகில் சென்று பார்த்தேன்.

என்ன அதிசயம்! இதோ இப்போது பார்த்த நீர்த்துளி அடுத்த நொடி அதே இடத்தில் இல்லை. எதை வைத்து நதி இங்கே இருக்கிறது என்று நான் சொல்வது? நான் பார்த்து என்னை கடந்து போன நீர்த்துளிகளா? பார்க்க போகும் நீர்த்துளிகளா? புரிகிறது, பார்த்து கொண்டே இருக்கையில் ஓடிக்கொண்டே இருக்கும் நீர்த்துளிகள் மட்டும் தான் நதி என்று.

காலணியை விட்டுவிட்டு கொஞ்சம் நீரில் கால் நனைக்க முடிவெடுத்தேன். ஓர் அழகிய அலை அதன் போக்கில் தன்மையாக மெதுவாக வந்து கொண்டு இருந்தது. கால் வைக்கும் நேரத்தில் அதே அலை என் மேல் பட்டு கடந்து சென்றது. ஓர் க்ஷணம் அன்யோன்ய உணர்வு பெற்றேன். ஓர் உறவு நிறைந்தேன். பிரியா விடை கொடுத்தது போல் உணர்ந்தேன். மன அலையும் நீர் அலையும் அந்த ஓர் க்ஷணம் சேர்ந்து பிரிந்தது.

அது அதன் வாழ்வு வழி போவதை பார்த்து கொண்டு நின்றேன். மன நிறைவடைந்தேன், அதற்கு நன்றி சொன்னேன். மறுபடி சந்திப்போமென்றேன். ஆனால் எப்படி என்று எனக்கு நிச்சயம் தெரியாது. நதி வழியே அது. விதி வழியே நான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக